நாட்டில் தற்போது காணப்படுகின்ற கொரோனா தொற்று சூழ்நிலைக்கு மத்தியில், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை நடத்த முடியாது என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே திட்டமிடப்பட்ட தினத்தில் சாதாரண தரப் பரீட்சைகளை நடத்த முடியாது போகும் என நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போது அமைச்சர் கூறியுள்ளார்.
எனினும், மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு பரீட்சை நடத்தப்படுவதற்கு 6 வாரங்களுக்கு முன்னதாக, பரீட்சைக்கான புதிய திகதி அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நாட்டில் காணப்படும் சுகாதார நிலைமை குறித்து ஆராய்ந்து, தீர்மானங்களை எடுத்து வருவதாக தெரிவித்துள்ள அவர், தற்போதைய நிலையில் பரீட்சையை நடத்த முடியாது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாணவர்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும், நாட்டில் நிலவும் சுகாதார நிலைமைகளை ஆராய்ந்து விரைவில் பரீட்சையை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழமையாக டிசம்பர் மாதம் நடத்தப்படும் சாதாரண தரப் பரீட்சைகள் இம்முறை கொரோனா பரவல் காரணமாக 2021 ஜனவரி 18 ஆம் திகதி நடத்தப்பட இருந்ததோடு, மீண்டும் பரீட்சை கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.