January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மஹர சிறைச்சாலை வன்முறைகளின் பின்னணியை விளக்கியுள்ள பொலிஸார்

சிறைக்கைதிகள் மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளே மஹர சிறைச்சாலை வன்முறைக்கு காரணம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் 9 கைதிகள் உயிரிழந்துள்ளதோடு, 107 கைதிகளும் 2 சிறைச்சாலை அதிகாரிகளும் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்களிடம் இதுவரையில் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்படவில்லை என்றும் எதிர்வரும் நாட்களில் வாக்குமூலங்களைப் பதிவுசெய்துகொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்குமூலங்களைப் பதிவுசெய்துகொள்ளும் போது, அவர்களுக்கு எவ்வாறு காயங்கள் ஏற்பட்டன என்பது தொடர்பில் அறிந்துகொள்ள முடியுமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த சம்பவத்தில் கைதிகள் தமக்கிடையே மோதல்களை ஏற்படுத்தி கொண்டுள்ளதாகவே தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருந்த நிலையில், மற்றுமொரு தரப்பினர் அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சித்தபோதே, கடந்த 29 ஆம் திகதி மாலை மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

மஹர சிறைச்சாலையில் புதிதாக 183 கைதிகளுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர் தப்பிச் செல்ல முயற்சித்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறைவைக்கப்பட்டுள்ள கைதிகளை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு ஏற்பட்ட மோதலையடுத்து, அதிகாரிகள் தமது குறைந்த அதிகாரத்தை பயன்படுத்தி துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளதாகவே, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் பக்கச்சார்பற்ற விசாரணைகளை வலியுறுத்தியுள்ளதோடு, விசாரணைகளை மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பிக்க ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.