May 5, 2025 19:25:44

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை யுத்தத்தில் இங்கிலாந்து தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் வகிபாகம் குறித்து விசாரணை

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் இங்கிலாந்தின் தனியார் பாதுகாப்பு நிறுவனமொன்று போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளதா? என்பது தொடர்பான விசாரணைகளை ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் ஆரம்ப கட்டத்தில், இங்கிலாந்து தனியார் பாதுகாப்பு நிறுவனமொன்றின் பங்களிப்பு தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான யுத்தத்தில் இலங்கையின் பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு இங்கிலாந்தின் கே.எம்.எஸ் தனியார் பாதுகாப்பு நிறுவனம் பயிற்சியளித்துள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து கடந்த மார்ச் மாதம் பரிந்துரைகள் கிடைத்துள்ளதாக மெட்ரோபொலிட்டன் பொலிஸ் தலைமையகமான ஸ்கொட்லாந்து யார்ட் தெரிவித்துள்ளது.

தற்போது அது தொடர்பான விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் வெளிவந்த இங்கிலாந்தை சேர்ந்த புலனாய்வு பத்திரிகையாளர் பில் மில்லர் எழுதிய புத்தகத்தில், இலங்கை உள்நாட்டு யுத்தத்தில் கே.எம்.எஸ் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் போர்க்குற்றங்கள் குறித்த குறிப்புகள் காணப்படுவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இதுவே, ஸ்கொட்லாந்து யார்ட் போர்க்குற்ற விசாரணைப் பிரிவு விசாரணைகளை விரிவுபடுத்த வித்திட்டுள்ளதுடன், அதனை நூலாசிரியர் பில் மில்லர் வரவேற்றுள்ளார்.

இலங்கை யுத்தத்தில் இங்கிலாந்து நேரடியாகத் தலையிடாமல், தனியார் பாதுகாப்பு நிறுவனமொன்றின் மூலம் போர்க்குற்றங்களுக்கு ஒத்துழைத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சர்வதேச விசாரணைகளைக் கோரியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.