November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அக்கரைப்பற்று பிரதேசம் கடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அறிவிப்பு!

Photo: Twitter/ Srilanka red cross

அம்பாறை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அக்கரைப்பற்று பொலிஸ் பிரதேசம் கடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவுகளின் ஒத்துழைபை பெற்று பொதுமக்கள் இந்த தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்பில் கடைப்பிடிக்கும் முறைகள் குறித்து கண்டறியுமாறு ஆளுநர், மாகாண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தற்பொழுது இந்த பிரதேசத்தில் 58 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அத்தோடு கல்முனை பிரதேசத்தில் இதுவரையில் 86 நோயாளர்கள் பதிவாகி இருப்பதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாஹரன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையை கருத்தில் கொண்டு அக்கரைப்பற்று பொலிஸ் எல்லைப்பகுதிக்குள் வாழும் எந்தவொரு நபரும் தமது வீடுகளில் இருந்து வெளியேறக்கூடாது என்று ஆளுநர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த பிரதேசத்திற்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் நடமாடும் வாகன சேவைகள் மூலம் விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆளுநர் சம்பந்தப்பட்ட அதிகரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.