November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திசர பெரேராவின் சகலதுறை ஆட்டத்தில் தம்புள்ளையை வீழ்த்தியது யாழ்ப்பாணம்!

photo/Lanka premier league/facebook

எல்.பி.எல் இருபது20 கிரிக்கெட் தொடரில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி தனது இரண்டாவது போட்டியிலும் அபாரமாக வெற்றியீட்டியது.

அணித்தலைவர் திசர பெரேராவின் அதிரடியின் மூலம் தம்புள்ள வைகிங் அணியை 66 ஓட்டங்களால் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி வென்றது.

ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும் தம்புள்ள வைகிங் அணிகள் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி ஆரம்பத்தில் பின்னடைவுக்குள்ளானது.

அவிஷ்க பெர்னாண்டோ,டொம் மூர்ஸ், மினோத் பானுக, தனஞ்சய டி சில்வா ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 4.4 ஓவர்களில் 36 ஓட்டங்களுக்கு முதல் 4 விக்கெட்டுகளை இழந்தது.

சொஹைப் மாலிக் 23 ஓட்டங்களையும்,சத்துரங்க டி சில்வா 29 ஓட்டங்களையும் பெற்று ஆறுதல் கொடுத்தனர்.

ஏழாம் இலக்க வீரராகக் களமிறங்கிய அணித்தலைவர் திசர பெரேரா அபாரமாக துடுபெடுத்தாடி 44 பந்துகளில்  ஆட்டமிழக்காமல் 97  ஓட்டங்களைக் குவித்தார்.

இதன்போது அவர் 7 சிக்ஸர்கள், 8 பௌண்டரிகளை அதிரடியாக விளாசினார்.

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி திசர பெரேராவின் அதிரடியின் மூலம் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 218 ஓட்டங்களைக் குவித்தது.

சமித் பட்டேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

219 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய தம்புள்ள வைகிங் அணி ஆரம்பத்திலேயே தடுமாற்றமான நிலைக்கு தள்ளப்பட்டது. 24 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டது.

நிரோஸன் திக்வெல்ல, போல் ஸ்ரேலிங், உபுல் தரங்க ஆகியோரால் பெரிதாகப் பிரகாசிக்க முடியவில்லை.

சமித் பட்டேல் 41 ஓட்டங்களையும், அணித்தலைவர் தசுன் ஸானக 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

தம்புள்ள வைகிங் அணி 19.1 ஓவரில் 152 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

உஸ்மான் சின்வாரி 3 விக்கெட்டுகளையும், பினுர பெர்னாண்டோ, திசர பெரோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இது எல்.பி.எல் தொடரில் தம்புள்ள அணி விளையாடிய இரண்டாவது போட்டியாகும். அவர்கள் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தில் உள்ளனர்.

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்தை வகிக்கிறது.