July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கார்த்திகை தீபம் ஏற்றிய யாழ்.பல்கலை மாணவன் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்துக்கு நேரே உள்ள பண்பாட்டு வாயிலில் கார்த்திகை தீபம் ஏற்றிய நிலையில் கைது செய்யப்பட்ட மாணவன் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவன் மசகையா தர்ஷிகன் என்பவரே இன்றிரவு 7.45 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலின் முன்பாக இராமநாதன் வீதியில் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்துக்கு நேர் முன்பாக அமைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக பண்பாட்டு வாயிலில் இன்று மாலை 6 மணிக்கு தீபங்களை ஏற்றுவதற்கு மாணவர்கள் சிட்டிகளுடன் தயாராகியிருந்தனர்.

பல்கலைக்கழக வளாகத்துக்குள் செல்லும் வாயில்கள் மூடப்பட்டதால் பரமேஸ்வரன் ஆலயத்தில் தீபம் ஏற்ற முடியாத நிலையில் மாணவர்கள் இவ்வாறு பண்பாட்டு வாயிலின் வெளியே தீபங்களை ஏற்ற முற்பட்டனர்.

அதனை அறிந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அந்த இடத்துக்கு வந்து தீபங்கள் ஏற்றுவதற்கு அனுமதியில்லை என்று தெரிவித்தனர்.

எனினும் மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் தீபங்களை ஏற்றுமாறு பொலிஸார், மாணவர்களுக்கு அறிவுறுத்தினர்.
தமது அறிவுறுத்தலை மீறி தீபங்கள் ஏற்றினால் கைது செய்யப்படுவீர்கள் என்று பொலிஸார் எச்சரித்திருந்தனர்.

இந்த நிலையில் 7.45 மணியளவில் தீபம் ஏற்றிய விஞ்ஞான பீட மாணவன் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற சட்டத்தரணிகள் வி.திருக்குமரன், வி.மணிவண்ணன் இருவரும் மாணவனை விடுவிக்க பொறுப்பதிகாரியுடன் பேச்சு நடத்தினர்.

மாணவனிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் பொலிஸார் அவரை விடுவித்தனர்.

இந்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவிக்கையில்;

“வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். இந்துக்களின் நிகழ்வை நடத்த முடியாது தடுத்ததுடன், மாணவனை கைது செய்தமை தவறு என்று சுட்டிகாட்டினேன்.

மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் இன்று இந்துக்களின் கார்த்திகை தீபத்திருநாள் என்று தான் அறிந்திருக்கவில்லை என்றும் மாணவனை உடனடியாக விடுவிப்பதாகவும் உறுதியளித்தார்” என்று தெரிவித்தார்.

இதேவேளை, மாணவன் கைது பற்றி அறிந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராசா, கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் தொடர்புகொண்டு மாணவனின் விடுதலையை வலியுறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.