Photo: Thakashi Anthony / Twitter
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள வன்முறைகளைத் தொடர்ந்து, கைதிகள் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 70 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சடலங்களும் காயமடைந்தவர்களும் ராகம வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலையில் தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் கூறுகின்றனர்.
கைதிகள் சிறைச்சாலையில் உள்ள ஆவண காப்பகம் ஒற்றுக்கும், சில கட்டடங்களுக்கும் தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இரவு வரையான நிலைமை
கம்பஹா மாவட்டத்தில் உள்ள மஹர சிறைச்சாலையில் தீ ஏற்பட்டுள்ளது.
சிறைச்சாலைக்குள் இருந்து தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
தற்போது சிறைச்சாலைக்கு முன்னால் கைதிகளின் உறவினர்கள் கூடியுள்ளதால் அந்தப் பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
சிறைச்சாலையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த நாட்களாக கைதிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று கைதிகள் பலர் சிறைச்சாலையின் பிரதான வாயிலை உடைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சித்தபோது சிறைக் காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கைதி ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் 3 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
கைதிகளிடையே ஏற்பட்ட வன்முறை மோதல்களைத் தொடர்ந்து அங்கே நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
ஆனால் தொடர்ந்தும் அங்கு அமைதியின்மை நிலவி வருவதுடன், உள்ளிருந்து அடிக்கடி துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்பதாகவும் கூறப்படுகின்றது.
தற்போது அங்கு தீயணைப்பு படையினரும், கடற்படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.