கம்பஹா மாவட்டத்திலுள்ள மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்பு அதிகாரிகளினால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கைதியொருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் 3 பேர் இந்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், அங்கிருந்து கைதிகள் சிலர் தப்பிச் செல்ல முயற்சித்த போதே அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் சிறைச்சாலை அதிகாரிகள் தமக்கான அதிகாரத்தை பயன்படுத்தி துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அங்கு வெளியிடங்களில் இருந்து பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் அனுப்பி வைக்கப்பட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சிறைச்சாலைகளில் இதுவரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.