January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”யாழ்ப்பாணம் முடக்கப்படவுள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை”

யாழ்ப்பாணத்தை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் இல்லை என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

‘யாழ். குடாநாட்டை முடக்குவதற்கு தீர்மானம்’ என தலைப்பிடப்பட்டு சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், அந்த செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் இது தொடர்பில் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை யாழ். காரைநகர் பகுதிக்கு கொழும்பிலிருந்து வருகை தந்த ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவருடன் நேரடி தொடர்புகளைப் பேணிய 21 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. அந்த பி.சி.ஆர் பரிசோதனை முடிவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டால் மாத்திரமே காரைநகர் பிரதேசம் முடக்கப்படக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றது.

எனினும் அது தொடர்பில் தற்போது வரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.