January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதற்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் நாளை முதல் விசாரணைக்கு

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்களை நாளை முதல் விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கொவிட்- 19 தொற்றுக்கு உள்ளாகி, உயிரிழக்கும் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி கோரி, முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தரப்பில் 12 அடிப்படை உரிமை  மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்களை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர்நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அலுவிஹார, சிசிர டி ஆப்றூ மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

கொரோனா தொற்றால் உயிரிழக்கும் அனைவரையும் எரிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு 2020 ஏப்ரல் 11 ஆம் திகதி வெளியிட்டுள்ள வர்த்தமானியை வலுவிழக்கச் செய்யக் கோரியும், இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுக்களின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான எம்.ஏ. சுமந்திரன், பைசர் முஸ்தபா, நிசாம் காரியப்பர், சிரேஷ்ட சட்டத்தரணிகளான ருஷ்தி ஹபீப், ஏர்மிசா டகேல், விரான் கொரயா, என்.எம்.சஹீத் மற்றும் பாயிஸ் உள்ளிட்டோர் ஆஜராகவுள்ளதாகத் தெரியவருகின்றது.

அதேபோன்று, இம்மனு தொடர்பில் இடையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ள வைத்தியர் சன்ன பெரேரா சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன சுய தனிமைப்படுத்தலில் இருப்பதால், அவரது கனிஷ்ட சட்டத்தரணிகள் ஆஜராகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.