
இலங்கை, இந்தியா மற்றும் மாலைதீவு நாடுகளுக்கு இடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான 4 ஆவது முத்தரப்பு மாநாடு நேற்று கொழும்பில் நடைபெற்றது.
இலங்கை பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் மரியா திதி ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
மொரீஷியஸ் மற்றும் சீஷெல்ஸ் நாடுகளின் பாதுகாப்பு பிரிவு முக்கியஸ்தர்கள் மாநாட்டின் கண்காணிப்பாளர்களாக பங்குபற்றினர்.
இந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே ஆகியோர் கலந்து கொண்டனர்.
சமுத்திரப் பாதுகாப்பு ஒத்துழைப்பை நோக்காகக் கொண்ட இந்த மாநாட்டில் இந்திய கடல் வலயத்தில் சூழல் மாசு, இடர் முகாமைத்துவம், ஒருங்கிணைந்த செயற்பாடு மற்றும் கடல்சார் உரிமைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
வலயத்தின் அமைதியையும், பாதுகாப்பினையும் உறுதிப்படுத்தும் நோக்கில் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு இதன்போது இணக்கம் காணப்பட்டதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உளவுத்துறை தகவல்கள் பகிர்வை விரிவுபடுத்தவும், அத்துடன் பயங்கரவாத செயற்பாடுகள், போதைப்பொருள் கடத்தல், ஆயுதக்கடத்தல், ஆட்கடத்தல் ஆகியவற்றை தடுப்படுப்பது தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இணைய பாதுகாப்பு தொடர்பாகவும் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் எடுக்கபட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடும் வகையில் பிரதிநிதிகள் அடிக்கடி கூடுவதற்கும் இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் கொரோனா தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் நிலைமையை கருத்திற்கொண்டு வைரஸ் தொற்றினை கருத்தில் கொண்டு இந்த மாநாடு கடும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றியே நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.