நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன், நோர்வூட்டில் தீ விபத்தால் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள மக்களுக்கு வெகுவிரைவில் பாதுகாப்பான இடத்தில் தனி வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நோர்வூட், நிவ்வெளிகம தோட்டத்தில் தொழிற்சாலை பிரிவிலுள்ள மூன்றாம் இலக்க லயன் குடியிருப்பில் நேற்றிரவு ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் 12 அறைகளைக் கொண்ட லயன் குடியிருப்பு முழுமையாக தீக்கிரையாகியுள்ளதுடன் 13 குடும்பங்களைச் சேர்ந்த 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகளை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனையின் பிரகாரம் நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளரும், அரச அதிகாரிகளும் முன்னெடுத்திருந்தனர்.
அயரபி பாடசாலையிலும், அத்தோட்டத்திலுள்ள பழைய தொழிற்சாலைக் கட்டிடத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடுவதற்காக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நிவ்வெளிகம பிரிவுக்கு இன்று சென்றிருந்தார்.
அவர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் அவர்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் உறுதியளித்திருந்தார்.
குறிப்பாக தனி வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும் என கூறியதுடன், இது தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளுக்கு அறிவித்து விரைவில் இடம் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் கூறினார்.
அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை தனது அமைச்சின் ஊடாகவும், நோர்வூட் பிரதேச சபை ஊடாகவும் வழங்குமாறும் ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்தார்.
மேலும் மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் ஏற்கனவே அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புத் திட்டம் துரிதப்படுத்தப்படும் என்ற உறுதிமொழியையும் இராஜாங்க அமைச்சர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.