போதைப்பொருள், பாதாளக் குழுக்களின் சட்டவிரோத வர்த்தகத்தை இல்லாதொழித்தல், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, பயங்கரவாதம், மற்றும் பாதுகாப்பு போன்ற விடயங்களில் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கு இடையே ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சர் மரியா அஹமத் ஆகியோருக்கிடையிலான சந்திப்பிலேயே இவ்விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
சந்திப்பின் போது, பிராந்திய பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமர் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜிட் டோவால், மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சர் மரியா அஹமத் உள்ளிட்ட பிரதிநிதிகள் பாதுகாப்பு கலந்துரையாடல்களை நடத்த இலங்கை வந்துள்ளனர்.
பிரதமர் மகிந்தவுடனான கலந்துரையாடலில் மாலைத்தீவு பிரதி பாதுகாப்பு படைத் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் அப்துல் ரஹீம் அப்துல் மதின், இலங்கைக்கான மாலைத்தீவு உயர்ஸ்தானிகர் ஓமார் அப்துல் ரசாக், பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் இஸ்மாயில் நசீர், இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் பிரதமரின் செயலாளர் காமினி செனரத் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.