File Photo
நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் திறக்க முடியாவிட்டால், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை ஒத்திவைக்க நேரிடும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஒரு வார காலத்திற்குள் முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று ஆளும் கட்சி உறுப்பினர் சாந்த பண்டாரவினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
க.பொ.த. சாதாரண தர பரீட்சையை 2021 ஜனவரி 18ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது கொரோனா தொற்றுப் பரவல் அச்சம் நிலவும் பிரதேசங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால், அந்தப் பிரதேசங்களில் க.பொ.த சாதாரண தர வகுப்புகளை ஆரம்பிக்க முடியாது போனால் குறிப்பிட்ட தினத்தில் பரீட்சையை நடத்த முடியாது போகும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலொன்று நடத்தப்படவுள்ளதாகவும். அதன்போது பரீட்சைக்கான தினம் தொடர்பாக தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.