October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் கொரோனா பரவல்; மருத்துவமனை உட்பட பல்வேறு இடங்களும் முடக்கம்

கொழும்பிலிருந்து காரைநகருக்குத் திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், யாழ்ப்பாணத்தில் கொரோனா பரவல் அவதானம் ஏற்பட்டுள்ளது.

நேற்று குறித்த நபருக்கு கொவிட்- 19 வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதோடு,  அவர் சென்று வந்த இடங்கள் சுகாதாரத் துறையினரால் இனங்காணப்பட்டு, தொடர்புடையவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 21 ஆம் திகதி கொழும்பு வெள்ளவத்தையிலிருந்து காரைநகருக்கு வருகை தந்த அவர், பல பகுதிகளுக்கும் சென்றுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். தப்பட்டுள்ளார்.

வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை

இதனையடுத்து யாழ்ப்பாணம், சங்கானை நகரில் அமைந்துள்ள மீன் சந்தை மற்றும் மதுபானசாலை என்பனவற்றை மறு அறிவித்தலை வரும் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சங்கானை மீன் சந்தை வியாபாரிகள் 36 பேர் குடும்பத்துடன் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், சைக்கிள் கடை ஒன்றல் பணிபுரிந்த 6 பேரின் குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்தோடு, சங்கானை மதுபானசாலை மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளது. அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த 4 பேர் குடும்பத்துடன் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில், மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை யை 3 நாட்களுக்கு மூட பொது சுகாதாரப் பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர்.

மேலும், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களை பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தி, தொற்று இல்லை என உறுதியான பின்னர் மீன் சந்தை, மதுபான சாலை என்பன திறக்க அனுமதிக்கப்படும் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

 காரைநகரை தனிமைப்படுத்தும் நோக்கம் இல்லை

காரைநகர் பிரதேசத்தில் கொரோனா வைரஸ் உறுதிபடுத்தப்பட்ட நபருடன் தொடர்புடையவர்களை சுகாதாரத் துறையினர் அடையாளம் காண நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ் மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

எனினும், காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவை தனிமைப்படுத்தும் தீர்மானத்தை இன்னும் எடுக்க வில்லை என்றும் இன்று மாலை அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி வர்த்தக நிலையங்கள் மூடல்

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் தனியார் வைத்தியசாலையின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் 4 வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பால முரளி அறிவுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் – கொழும்பு பயணிகள் மற்றும் பொருள்கள் சேவையில் ஈடுபடும் அதிசொகுசு பேரூந்து மற்றும் பாரவூர்தி வாடிக்கையாளர் நிலையமும் புடவைக்கடை ஒன்றும் நாவாந்துறையில் உள்ள வியாபார நிலையமொன்றையும் உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ். வேலணையில் கொரோனா

மேலும், யாழ். வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கெக்கிராவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபருக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது. அதனையடுத்து புளியங்கூடல் பகுதியில் 10 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 2 வர்த்தக நிலையங்கள் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலில் இன்று காலை உடனடியாக மூடப்பட்டுள்ளன.

சுகாதாரத் துறையினர் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.