January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொடர்பான வர்த்தமானியில் திருத்தங்களைப் பரிந்துரைத்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பது மனித உரிமை மீறல் எனத் தெரிவித்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு, கொவிட்- 19 மரணங்களைக் கையாளும் வர்த்தமானி அறிவித்தலில் 5 திருத்தங்களையும் பரிந்துரைத்துள்ளது.

கொவிட்- 19 தொற்றுக்கு உள்ளாகாமல், வீடுகளில் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களும் பலவந்தமாக எரிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்களை 72 மணித்தியளங்களின் பின்னர் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும், அது சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு விரோதமானது என்றும் குறித்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேநேரம், கொரோனா மரணங்களைக் கையாளும் சுகாதார அமைச்சின் வர்த்தமானி அறிவித்தலில் பின்வரும் 5 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரித்துரைத்துள்ளது.

  • கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை சுகாதார விதிமுறைகளைப் பேணி, அடக்க செய்ய அனுமதித்தல்.
  • உயிரிழந்தவர்களுக்கு 24 மணித்தியாலங்களுக்குள் பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுத்தல்.
  • வீடுகளில் உயிரிழந்தவர்களை பொலிஸ் பிரேத அறைக்கு எடுத்துச் செல்வதை நிறுத்தல்.
  • கொரோனா உயிரிழப்புகளைக் கையாளும் போது, வெளிப்படைத்தன்மையுடன் செயற்படல்.
  • கொரோனா மரணங்களைக் கையாளும் முகாமைத்துவ விடயங்களில் சமூக பிரதிநிதிகளின் பிரசன்னத்தை உறுதிசெய்தல்.

நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை கொரோனா தொற்றால் உயிரிழந்த 17 முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் பலவந்தமாக எரிக்கப்பட்டுள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.