இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை இன்று பிற்பகல் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பு விஜேராமவில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்து செய்தியொன்றை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் அஜித் டோவால் வழங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகள் குறித்தும், தற்போது முகம்கொடுத்துள்ள கொவிட் தொற்று நிலைமை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது, கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் இப்பிராந்தியத்தின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் மற்றும் அபிவிருத்தியை நோக்கி பயணிக்கும் மூலோபாயங்களை கண்டறிய வேண்டும் என்று அஜித் டோவால் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான மூலோபாய பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை முன்னிலை வகிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டதுடன், அதற்கு இந்திய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவை பெற்றுத் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்போது, இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பிரதேசங்களில் வீடமைப்பு திட்டங்களை செயற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, அத்தகைய வீடமைப்பு திட்டங்களை தென் பகுதிகளை மையமாகக் கொண்டு ஆரம்பிப்பதற்கும் ஆதரவை பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டார்.
அதற்கு பதிலளித்த அஜித் டோவால், இந்த விடயத்தில் இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை பெற்றுத் தருவதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டலின் கீழ் நவீன தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தி இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள குடிநீரை பெற்றுக் கொடுக்கும் திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தி, அத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இலங்கையில் நீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு இச்சந்திப்பின் போது உடன்பாடு எட்டப்பட்டதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவும் கலந்துகொண்டிருந்தார்.
இன்றும் நாளையும் கொழும்பில் நடைபெறும் இலங்கை, இந்தியா மற்றும் மாலைதீவு நாடுகளுக்கு இடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அஜித் டோவல் இலங்கை வந்துள்ளார்.