
Photo; twitter/ Srilanka red cross
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 410 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை இன்று மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 251 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய இலங்கையில் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 22,279 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,226 ஆகவும் உயர்வடைந்துள்ளது.
தற்போது வைத்தியசாலைகளில் 5,954 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
நேற்று 553 பேருக்கு தொற்று
நேற்றையதினம் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புடைய 553 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இவர்களில் கொழும்பு மாவட்டத்தில் 253 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 65 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 35 பேரும் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
தனிமைப்படுத்தலுக்கு சென்றவர்கள் பயணித்த பஸ் விபத்து
ஓமான் நாட்டிலிருந்து நாடு திரும்பிய 25 பயணிகளுடன் யாழ். விடத்தல் பளை தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு பயணித்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
கிளிநொச்சி பளை – ஆனைவிழுந்தான் பகுதியில் இன்று காலை 9.45 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த பஸ், வீதியை விட்டு விலகி நீர் விநியோக குழாய் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தெஹிவளையில் 8 பேருக்கு தொற்று
கொழும்பு தெஹிவளை பிரதேசத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரதிவிம்பாராம, கெவும்வத்த பகுதியிலேயே தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனால் அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
பொகவந்தலாவையில் அறுவருக்கு கொரோனா தொற்று
பொகவந்தலாவை சுகாதா வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொட்டியாகலை கீழ்பிரிவு, டிக்கோயா டில்லரி தோட்டம், நோர்வூட் வெஞ்சர் தோட்டம், செல்வகந்தை தோட்டம், பொகவான தோட்டம், மோரா ஆகிய தோட்டங்களை சேர்ந்த 52, 32, 21, 26 வயதுடையவர்களே இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இவர்களை கொரோனா சிகிச்சை முகாம்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சுகாதார பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆறு பேரும் கொழும்பு புறக்கோட்டை, புளுமென்டல், பம்பலப்பிட்டி போன்ற பகுதிகளிலிருந்து கடந்த 17 ஆம் திகதி தமது வீடுகளுக்கு வந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.