இலங்கையில் தொடங்கியுள்ள எல்பிஎல் கிரிக்கெட் தொடரில் 5 அணிகள் பங்கெடுக்கின்றன. அதில் யாழ். நகரை மையப்படுத்தி உருவாகியுள்ள ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் வட மாகாணத்தைச் சேர்ந்த 4 இளம் வீரர்களுடன் தேசிய மற்றும் சர்வதேச வீரர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
சென். ஜோன்ஸ் கல்லூரியின் மாணவன் தெய்வேந்திரம் டினோசன், அந்தப் பாடசாலையின் பழைய மாணவன் கனகரத்தினம் கபில்ராஜ், யாழ். மத்திய கல்லூரியின் மாணவன் விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோருடன் கிளிநொச்சியை சேர்ந்த செபஸ்தியன்பிள்ளை விஜயராஜும் யாழ். அணியில் இடம்பிடித்துள்ளனர்.
கபில்ராஜ்
கபில்ராஜ் வேகப் பந்துவீச்சாளர், கடந்த வருடம் தமிழ் யூனியன் கழகத்தின் 23 வயதிற்குட்பட்ட அணியிலும், இம்முறை பொலிஸ் கழகத்தின் 23 வயதிற்குட்பட்ட அணியிலும் அங்கம் வகித்தவர்.
2017 , 2018 ஆண்டுகளில் ‘வடக்கின் பெரும் சமரில்’ 10 விக்கெட்டுக்களை தொடர்ச்சியாக கைப்பற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். தேவை ஏற்படும் பட்சத்தில் பின் வரிசையில் அடித்தாடக்கூடிய வல்லமை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வியாஸ்காந்த்
வியாஸ்காந்த் வலதுகை லெக் ஸ்பின் பந்து வீச்சாளர் இலங்கையின் 19 வயதிற்குட்பட்ட அணியில் 2018 ஆம் ஆண்டில் விளையாடினார்.
யாழ். மத்திய கல்லூரியின் தற்போதைய தலைவராக உள்ள வியாஸ்காந்த், 2019 இல் ‘வடக்கின் பெரும் சமரின்’ ஆட்ட நாயகன் விருதையும் வென்றவர். மத்திய வரிசையில் தேவைக்கேற்ப துடுப்பெடுத்தாட கூடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டினோசன்
18 வயதான டினோசன் ஒரு சகலதுறை வீரர் கடந்த வருடம் சூப்பர் புரோவின்ஸியல் தொடரில் தம்புள்ள அணியை பிரதிநிதித்துவம் செய்ததவர். தற்போது இலங்கை கிரிக்கெட் சபையின் இளைய வீரர்கள் அபிவிருத்தி குழாமில் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்.
விஜயராஜ்
லசித் மாலிங்கவின் பாணியில் பந்துவீசும் திறமை கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயராஜ், இலங்கை தேசிய அணி வீரர்களுடன் சர்வதேச மைதான வலைப் பயிற்சிகளில் பந்துவீசிய அனுபவமுள்ளவர்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் சக்தி-சிரச தனியார் தொலைக்காட்சியினால் அடையாளம் காணப்பட்ட செபஸ்தியாம்பிள்ளை விஜயராஜ் அப்போதைய தெரிவுக் குழுத்தலைவராக இருந்த சனத் ஜயசூரியவிடம் அறிமுகப்படுத்தப்பட்டார்.
நான்கு-கட்ட திட்டம்
ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் உரிமத்தினை பிரிட்டனைச் சேர்ந்த இளம் தொழிலதிபரான பிருந்தன் பகிரதன் தலைமையிலான 12 வர்த்தகர்கள் கொண்ட அணியினர் பெற்றுள்ளனர்.
பிருந்தன் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளின் கிரிக்கெட் வட்டங்களில் நன்கு அறியப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“வடக்கு மாகாணத்தில் கிரிக்கெட் விளையாட்டினை முன்னேற்றுவதே யாழ்ப்பாண அணியின் நோக்கம்” என அதன் நிர்வாகிகள் அண்மையில் நடைபெற்ற அறிமுக நிகழ்வில் கூறியிருந்தனர்.
அதற்காக நான்கு-கட்ட மூலோபாய திட்டமொன்றை வகுத்துள்ளதாக அணியின் நிர்வாகிகளில் ஒருவரான ஆனந்தன் ஆர்னோல்ட் தெரிவித்தார்.
- முதல்கட்டமாக குறைந்தது 3 யாழ் வீரர்களை அணிக்குழாமில் உள்வாங்குதல்.
- அடுத்ததாக வடக்கு-கிழக்கின் ஏனைய பாகங்களிலுள்ள திறமையான இளம் வீரர்களை அணியின் ஓர் அங்கமாக இணைந்து கொள்வதற்குரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்தல்.
- மூன்றாவது கட்டமாக, ‘ஜப்னா ஸ்டாலியன்ஸ் கிரிக்கெட் கழகம்’ என்ற பெயரில் கிரிக்கெட் பயிற்சிக்கூடம் மற்றும் தொழில்முறை கிரிக்கெட் கழகம் ஒன்றை உருவாக்குதல்.
- அடுத்தபடியாக, குறித்த கழகத்தை இலங்கை கிரிக்கெட் சபையில் பதிவு செய்து தொழில்முறை கழக அணியாக இயங்குவதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுத்தல்.
வடக்கின் கிரிக்கெட் 30 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த தரத்திலேயே இப்போதும் இருப்பது கவலைக்குரியது என்று கூறிய ஆனந்தன் ஆர்னோல்ட், “நாங்கள் வெகுவிரைவில் முதற்தர கிரிக்கெட் அரங்கொன்றை அமைக்கவுள்ளோம்” என்று கூறினார்.
ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி வீரர்கள்:
திசர பெரேரா ( தலைவர்)
சுரங்க லக்மால்
தனஞ்ஜய டி சில்வா
அவிஷ்க பெர்ணான்டோ
வணிந்து ஹஸரங்க
சொய்ப் மாலிக் (பாகிஸ்தான்)
கயில் அபொட் (தென்னாபிரிக்கா)
உஸ்மான் ஷின்வாரி (பாகிஸ்தான்)
டொம் மூர்ஸ் (இங்கிலாந்து)
டுவான் ஒலிவர் (தென்னாபிரிக்கா)
ஜொன்ஸன் சார்ல்ஸ்
மினோத் பானுக
சதுரங்க டி சில்வா
மகேஷ் தீக்ஷன
சரித் அஸலங்க
விஜயகாந்த் வியாஸ்காந்த்
பினுர பெர்ணான்டோ
பிரபாத் ஜயசூரிய
நுவனிந்து பெர்ணான்டோ
கனகரத்தினம் கபில்ராஜ்
தெய்வேந்திரம் டினோஷன்
செபஸ்தியாம்பிள்ளை விஜயராஜ்
ஜப்னா ஸ்டாலியன்ஸின் 22 பேர் கொண்ட அணியில் சொய்ப் மாலிக், அவிஷ்க பெர்னாண்டோ, மினோத் பானுக, சரித அஸலங்க ஆகிய துடுப்பாட்ட வீரர்களின் பலம் உள்ளது.
அதேபோல் திசர பெரேரா, வணிந்து ஹஸரங்க, தனஞ்ஜய டி சில்வா, சதுரங்க டி சில்வா உள்ளிட்ட அதிக எண்ணிக்கையிலான சகலதுறை வீரர்களும் அணியை பலமானதாக மாற்றுகின்றனர்.
அணியின் தலைவராக வேகப்பந்து வீசும் சகலதுறை வீரரான திசர பெரேரா உள்ளமையும், சுழற்பந்து வீசும் சகலதுறை வீரர்களான- வணிந்து ஹஸரங்க, அவரது சகோதரரான சதுரங்க டி சில்வா மற்றும் இலங்கையின் நன்கறியப்பட்ட வீரரான தனஞ்ஜய டி சில்வா ஆகியோர் உள்ளமையும் யாழ்ப்பாண அணியின் பந்துவீச்சுக்கு வலு சேர்க்கிறது.
யாழ்ப்பாண அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இலங்கையின் முன்னாள் வீரர் திலின கண்டம்பி பணியாற்றுகிறார்.