
File Photo
மீனவர்களின் செயற்பாடுகளில் கடும் கெடுபிடிகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்து கடற்படையினர் செயற்படும் நிலையில், போதைப் பொருட்களும் மஞ்சளும் எவ்வாறு தடைகளின்றி கடத்தப்படுகின்றன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
2021 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கடற்தொழில், பெருந்தோட்டத்துறை மற்றும் காணி அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இந்த விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.
வன்னி மாவட்டத்தில் தென்னிலங்கை மீனவர்களின் ஆக்கிரமிப்பு மற்றும் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. இதற்கு தீர்வு காணுமாறு தொடர்ச்சியாக கூறி வந்தாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து கவனம் செலுத்துவதில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்லும் போது அனுமதிப்பத்திரங்கள் கேட்கப்படுவதுடன், கடுமையான சோதனைகளுக்கும் உட்படுத்தப்படும் நிலையில் போதைப் பொருட்களும் மஞ்சளும் எப்படி எந்தவித தடையுமின்றி கடத்தப்படுகின்றன என்று அவர் கேள்வியெழுப்பியதுடன், இதற்கு கடற்படையினரே பொறுப்புக் கூற வேண்டியவர்கள் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை வேறு நபர்கள் பயன்படுத்துவதன் காரணமாகவே நாட்டில் மஞ்சள், போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பதாகவும் இதனை தடுக்க வேண்டுமென்றால் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. தெரிவித்தார்.