October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைப் பல்கலைக்கழகங்களின் தர வரிசையில் யாழ். பல்கலைக்கழகத்திற்கு மூன்றாமிடம்

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் தரப்படுத்தல் பட்டியலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

உலகிலுள்ள பல்கலைக்கழகங்களை அவற்றின் தர நிர்ணய நியமங்களின் அடிப்படையில் தரப்படுத்தும் www.topuniversities.com  என்ற இணையத்தளத்தினால் வருடாந்தம்  மேற்கொள்ளப்படும் தரப்படுத்தலிலேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழகத் தரப்படுத்தல் வரிசையில் பேராதெனிய பல்கலைக்கழகம் முதலாவது இடத்தையும், கொழும்பு பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும், யாழ். பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தையும், மொரட்டுவ பல்கலைக்கழகம் நான்காவது இடத்தையும், ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம்  ஐந்தாவது இடத்தையும் பெற்றுள்ளன.

பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, போதனை சார் வள ஆளணியினரின் எண்ணிக்கை, கற்பிக்கப்படும் கற்கை நெறிகள், ஆராய்ச்சி கட்டுரைகளின் சர்வதேச சமர்ப்பணம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தரப்படுத்தல் மேற்கொள்ளப்படுகின்றது.

2020 ஆம் ஆண்டுக்கான தரப்படுத்தல் வரிசையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நான்காம் இடத்திலும், மொரட்டுவ பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்திலும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.