
Photo: Facebook/ Ajit Doval
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் முக்கிய விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளார்.
இலங்கை, இந்தியா மற்றும் மாலைதீவு நாடுகளுக்கு இடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அஜித் டோவால் இன்று கொழும்பு வருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக மாலைதீவின் பிரதிநிதிகளும் இன்று இலங்கை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை வரும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாடு இன்றும், நாளையும் கொழும்பில் நடக்கவுள்ளது.
இந்த மாநாட்டில் பங்களாதேஷ், சீசெல்ஸ் மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கண்காணிப்பு மட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்து சமுத்திரத்தின் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பினை விரிவுபடுத்தல் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இந்த மாநாடு இறுதியாக 2014 ஆம் ஆண்டு புதுடெல்லியில் நடைபெற்றதுடன், 6 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக இம்முறை கொழும்பில் நடக்கவுள்ளது.
இதேவேளை சீன உயர் மட்டக் குழு மற்றும் அமெரிக்கா இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயங்களை தொடர்ந்து, இந்திய பாதுகாப்பு ஆலோகரின் இன்றைய விஜயம் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.