ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் போர்குற்ற உள்ளக விசாரணை பிரேரணையில் இருந்து இலங்கை நீங்கியதால் அடுத்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக பிரேரணை ஒன்றினை நிறைவேற்றவுள்ளதாக பிரித்தானிய பாராளுமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்தின் நகர்வுகள் இலங்கைக்கு பாரிய நெருக்கடியை உருவாக்கப்போகின்றது எனவும் எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல சபையில் மீண்டும் எச்சரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தில் கமத்தொழில், நீர்ப்பாசன அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்;
சபையில் நேற்று வெளிவிவகார அமைச்சிற்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் சில காரணிகளை குறிப்பிட்டேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பான் கீன் மூனுடன் இணங்கிய வாக்குறுதிகள் குறித்து தெரிவித்தேன். இதில் உள்ளக விசாரணைக்கு அவர் இணங்கினார். ஆனால் ராஜபக்ஷ அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இந் நிலையில் எமது ஆட்சியில் நாம் உள்ளக விசாரணைக்கு இணக்கம் தெரிவித்தோம். எனினும் இப்போது மீண்டும் இந்த அரசாங்கம் பிரேரணையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
நேற்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.அந்த பிரேரணையில் நாம் போர்குற்ற உள்ளக விசாரணை பிரேரணையில் இருந்து நீங்கியதால் அடுத்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக பிரேரணை ஒன்றினை நிறைவேற்றவுள்ளதாக அவர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர். எமக்கு எதிராக பிரேரணை ஒன்று வருகிறதென்றால் அது மிக பாரதூரமான விடயமாகும். 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலைமை என்ன என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் எமக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் நாம் பொருளாதார தடையை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தோம். இந்த பொருளாதார தடைகளுக்கு முகங்கொடுக்க முடியாத காரணத்தினால் தான் 2015 ஆம் ஆண்டு தேர்தலுக்கு மஹிந்த ராஜபக்ஷ சென்றார். எனவே இப்போதுள்ள நிலையில் நாட்டினை கருத்தில் கொண்டு தீர்மானம் எடுக்க வேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.