November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிழக்கில் அதிகரிக்கும் கொரோனா அச்சம் : இலங்கையின் இன்றைய நிலவரம்

File Photo; Twitter/ srilanka red cross

அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று மரக்கறிச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில்  32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்கள் இன்று மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்தார்.

மரக்கறிச் சந்தையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதால் பேலியகொட கொத்தணி போன்று கிழக்கிலும் கொத்தணி ஏற்படுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது எனவும் அவர் கூறினார்.

அக்கரைப்பற்று நகரிலுள்ள மரக்கறிச் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த 22 பேருக்கு நேற்று எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 10 பேருக்கும், இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதாரப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தம்புள்ளை சந்தைக்கு மரக்கறிக் கொள்வனவுக்காகச் சென்ற நிலையில் இவர்களுக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலாபத்தில் சில பிரதேசங்கள் முடக்கம்

சிலாபம், வெல்ல பிரதேசத்தின் 4 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை இன்று பகலிலிருந்து தனிமைப்படுத்த சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சிலாபம் நகர எல்லைக்குட்பட்ட வடக்கு, தெற்கு கடற்கரை பிரிவு, குருசபாடு, ஏகொடவத்த ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த பகுதிகளில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதால், இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக புத்தளம் மாவட்ட பிரதி சுகாதார சேவை பணிப்பாளர், வைத்தியர் தினுசா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

நாட்டில் இன்று 553 பேருக்கு தொற்று 

கொரோனா தொற்றுக்குள்ளான 553 பேர் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இலங்கையில் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 22.,028 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 369 பேர் குணமடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 369 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன்படி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,447 இலிருந்து 15,816 ஆக அதிகரித்துள்ளது.

வெள்ளவத்தையில் 23 பேருக்கு தொற்று

நேற்று அடையாளம் காணப்பட்ட 502 தொற்றாளர்களுள் 262 பேர் கொழும்பு நகர சபைக்குட்பட்ட பிரதேசங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனனர்.

இவர்களில் வெள்ளவத்தையில் 23 பேரும், கிருலப்பனையில் 28 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தொழிற்சங்க போராட்டத்தில் பொதுச் சுகாதார அதிகாரிகள்

களுத்துறை மற்றும் பேருவளை சுகாதார பிரிவுகளில் கடமையாற்றும் சகல பொதுச் சுகாதார பரிசோதகர்களும் தமது கடமைகளிலிருந்து விலகியுள்ளனர்.

இடமாற்றம் செய்யப்பட்ட வைத்தியரொருவர் மீண்டும் பேருவளை பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவில் கடமையாற்ற வந்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே, இந்த தொழிற்சங்க போராட்டத்தை  ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, களுத்துறை மற்றும் பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முன்னெடுக்கப்படும் பிசிஆர் பரிசோதனை நடவடிக்கைகளுக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா

நுவரெலியா மாவட்டத்தில் கினிகத்தேன, மஸ்கெலியா மற்றும் வட்டவளை ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 7 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வட்டவளை – குயில்வத்தை, கினிகத்தேன – ஹிட்டிகே கம, மஸ்கெலியா – மவுசாகலை நைன்ஸா மேல் பிரிவு தோட்டம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

ஹட்டன், கினிகத்தேன ஹிட்டிகேகம பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் மூன்று வயது குழந்தை, மூன்று ஆண்கள் மற்றும் பெண்ணொருவர் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை, கடந்த சனிக்கிழமை கொழும்பிலிருந்து நுவரெலியா மாவட்டத்துக்கு வருபவர்கள் கினிகத்தேனை, கலுகல்ல பகுதியில் உள்ள சோதனைச்சாவடிக்கு அருகாமையில் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

கொழும்பில் இருந்து வந்த மூன்று வயது குழந்தையின் தாயிடமும் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே ஐவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.