November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தனியார் ஊடகங்களுக்கு அரச விளம்பரங்களை இடைநிறுத்துவது அநியாயம்’

கொரோனா வைரஸ் பரவல் ஊடகத்துறையை மோசமாகப் பாதித்துள்ள நிலையில், தனியார் ஊடகங்களுக்கு வழங்கப்படும் அரச விளம்பரங்களை இடைநிறுத்தும் தீர்மானம் அநியாயமானதாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகிர் மாகார் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் ஊடகம், வெளிவிவகார அமைச்சுகள் மற்றும் பிராந்திய உறவு அலுவல்கள் இராஜாங்க அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள ஊடக நிறுவனங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் அரசாங்கம் சலுகைகளை வழங்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் பிரச்சினைகளை ஜனநாயக ரீதியாக வெளிக்கொண்டுவர ஊடகங்களுக்கு அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஊடகச் சுதந்திரம் இல்லாமலாகும் போது, மக்கள் குரல் ஒடுக்கப்படுவதற்கும், நாடு சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்வதற்கும் சந்தர்ப்பம் ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகங்கள், ஊடக தர்மத்தைப் பேணி, தொழில்சார் தன்மையுடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.