October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர் இயந்திரத்தை நிறுவ சுவிட்ஸர்லாந்து நிதியுதவி

photo: Twitter/ Dominik Furgler

இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய தன்னியக்க பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்களை நிறுவுவதற்கு சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கியுள்ளது.

மேலும், 39 ஆயிரம் கொவிட்- 19 பி.சி.ஆர் பரிசோதனைத் தொகுதிகளையும் வழங்கியுள்ளது.

குறித்த பரிசோதனை  இயந்திரங்கள் இலங்கையில் முதல் தடவையாக நிறுவப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் நாளொன்றுக்கு 1300 ஆர்.டி – பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க முடியும் என்பதோடு, புலம்பெயர் தொழிலாளர்களது மீள்வருகையின் போது சுமார் மூன்று மணித்தியாலங்களில் பரிசோதனைகளை பாதுகாப்பாக உறுதி செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான அமைப்பானது, சுகாதார அமைச்சு, உலக சுகாதார ஸ்தாபனம், விமான நிலையங்கள் மற்றும் விமான போக்குவரத்து சேவை நிறுவனங்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய பங்குதாரர்களது ஒத்துழைப்புடனேயே இந்த ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.