இலங்கையில் தமிழர், முஸ்லிம்களின் உரிமைகளை அடையாளம் காணாத வரையில், இது சிங்கள நாடு என நினைத்துக்கொண்டுள்ள வரைக்கும் இலங்கை அரசாங்கம் சர்வதேச அரங்கில் பந்தாடப்பட்டுக்கொண்டே இருக்கும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பூகோள ரீதியிலும்,கேந்திர ரீதியிலும் இலங்கை முக்கியமான இடத்தில் உள்ளதாகவும் ஆகவே இலங்கையை எவரும் கால்பந்தாக நினைத்து பந்தாடக்கூடாது எனவும் ஆளும் கட்சியினர் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் இதுதான் இலங்கையில் கொள்கையாக காணப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து எதுவுமே சிந்திக்கப்படவில்லை. தமிழ் மக்களின் அரசியல் தீர்வுகள் என்ற விடயம் பேசப்படுகின்ற நேரத்தில் இலங்கை சீனாவின் பக்கம் சாய்ந்தது.
அமெரிக்கா போன்ற நாடுகள் அரசாங்கத்திற்கு எதிராக அழுத்தங்களை பிரயோகித்த காரணத்தினால் இலங்கை அரசாங்கம் சீனாவை சார்ந்தது.அதன் விளைவாக இன்று இலங்கை சுயாதீனமாக தீர்மானம் எடுக்க முடியாத அளவிற்கு சீனாவின் பக்கம் சாய்ந்தது.
இலங்கையில் தமிழர், முஸ்லிம்களின் உரிமைகளை அடையாளம் காணாத வரையில், இது சிங்கள நாடு என நினைத்துக்கொண்டுள்ள வரைக்கும் இலங்கை அரசாங்கம் பந்தாடப்பட்டுக்கொண்டே இருக்கும். அதிகளவில் எதிரிகளை சந்திக்க நேரிடும். இதனால் உங்களின் அரசியல் விளையாட்டில் நீங்கள் கண்டிப்பாக சீரழிவீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் தமிழர்களை பாதுகாத்தால் அதன் விளைவுகள் நம் அனைவருக்கும் ஆரோக்கியமானதாக அமையும், மாறாக இப்போது செய்யும் அதே தவறை செய்தால் நிச்சயமாக அதன் விளைவுகள் அரசாங்கத்தை நாசமாக்கும். சீனாவுடன் உறவு வேண்டாம் என நாம் கூறவில்லை. ஆனால் இந்தியாவை, அமெரிக்காவை பகைத்துக்கொள்ள வேண்டாம். இந்த விளையாட்டில் மோசமான தோல்வியை சந்திப்பீர்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.