July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஜெனிவா பிரேரணையில் இருந்து வெளியேற முடியாது என்ற எந்தவொரு சட்டமும் பேரவையில் இல்லை’

ஜெனீவா பிரேரணையில் இருந்து வெளியேற முடியாது என்ற எந்தவொரு சட்டமும், சம்பிரதாயமும் மனித உரிமைகள் பேரவையில் இல்லை. எமது அரசியல் அமைப்பு, மக்கள் ஆணைக்கு முரணானதாக கூறியே நாம் பிரேரணையில் இருந்து விலகினோம் என ஆளும் கட்சி உறுப்பினர் மஹிந்த சமரசிங்க சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் ஊடகம், வெளிவிவகார அமைச்சுகள் மற்றும் பிராந்திய உறவு அலுவல்கள் இராஜாங்க அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்தில், தான் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக ஜெனீவா பிரேரணையில் இருந்து வெளியேறுவதாக கூறினார். அதற்காகவே மக்களும் வாக்களித்தனர். அதற்கமையவே நாம் உடனடியாக ஜெனீவா பிரேரணையில் இருந்து வெளியேற தீர்மானம் எடுத்தோம். ஜெனீவா பிரேரணையில் இருந்து வெளியேற முடியாது என்ற எந்தவொரு சட்டமும், சம்பிரதாயமும் மனித உரிமைகள் பேரவையில் இல்லை. சுமந்திரன், கிரியெல்ல ஆகியோரை விடவும் எனக்கு இந்த விடயத்தில் அனுபவம் உள்ளது.

இந்த பிரேரணையில் இருந்து வெளியேறுவது குறித்த விடயத்தில் நாம் சட்ட பூர்வமாக நடவடிக்கை எடுத்தோம். எமது அரசியல் அமைப்பிற்கு முரணானது, அதேபோல் அமைச்சரவையில் தீர்மானம் எடுத்துள்ளோம் என்பதை தெளிவாக கூறினோம். நாம் யாருடனும் சண்டையிட்டு இந்த பிரேரணையில் இருந்து வெளியேறவில்லை. ஆரோக்கியமான வகையில் நாம் இந்த விடயங்களில் இருந்து எம்மை விடுவித்துக்கொண்டுள்ளோம்.

யுத்த காலத்தில் தமிழ் மக்களை நாம் பாதுகாத்தோம், அவர்களை நாம் தண்டிக்கவில்லை. விடுதலைப்புலிகள் அவர்களை பணயம் வைத்து போரிட்ட வேளையில் நாம் தமிழ் மக்களை பாதுகாத்தோம். இறுதி யுத்தத்தில் சரணடைந்த 15 ஆயிரம் இளைஞர்களை விரைவாக புனர்வாழ்வு வழங்கி அவர்களை சாதாரண வாழ்க்கையில் இணைத்தோம். வடக்கு கிழக்கில் துரிதமான அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்டது. கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளது.

இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும். எமது தூதுவர்கள் இன்று மிக முக்கியமான கடமைகளை முன்னெடுத்து வருகின்றனர். நாம் சகல நாடுகளுடனும் இணைந்து செயற்பட வேண்டும். அதுவே எமக்குள்ள வாய்ப்பாக அமையும் என்றார்.