February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்தினால் ‘தமிழர்கள் பழையவற்றை மறந்துவிடுவார்கள்’: லக்ஸ்மன் கிரியெல்ல

தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகள், அதிகாரப் பகிர்வு, சுதந்திரம் உறுதிப்படுத்தப்படும் அரசியல் அமைப்பொன்றை உருவாக்கினால் தமிழர்கள் பழையவற்றை மறந்து ஐக்கியப்படுவார்கள் என தமிழ் அரசியல் தலைமைகள் கூறியுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல கூறியுள்ளார்.

ஜனாதிபதி உருவாக்கும் அரசியல் அமைப்பில் அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், ஊடகம், வெளிவிவகார அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய கிரியெல்ல கூறினார்.

“2010 ஆம் ஆண்டு காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ இந்த சபையில் யுத்த வெற்றிக் கொண்டாட்டத்தில் இருந்த காலத்தில் நாட்டின் யதார்த்தமான நிலைமையை எடுத்துரைக்கும் விதத்தில் பேசினேன். ரொபட் முகாபே சென்ற பாதையில் செல்லாது மண்டேலா சென்ற பாதையில் செல்லுமாறு அவருக்கு கூறினேன்.

ஆனால் துரதிஷ்டவசமாக அவர் சரியான பாதையில் செல்லவில்லை, அவரது ஆட்சியில் 18 ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்டது, அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டார், ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர், சிலர் நாட்டை விட்டு ஓடினர், தொழிற்சங்கவாதிகள் கொல்லப்பட்டனர், நீதியரசர் விரட்டியடிக்கப்பட்டார். சிறுபான்மை மக்களின் உரிமைகள் நசுக்கப்பட்டன. இவை எல்லாம் சேர்ந்தே சர்வதேசம் எமக்கெதிராக திரும்பக் காரணமாக அமைந்தது.

அதிகாரப் பகிர்வு விடயத்தில் சிறுபான்மை மக்களின் உரிமைகள், சுதந்திரம் பாதுகாக்கப்படும் அரசியல் அமைப்பொன்று உருவாக்கப்பட்டால் தமிழர்கள் ஏனைய அனைத்தையும் மறந்து ஐக்கியமாக வாழத் தயாராக உள்ளதாக இலங்கையில் உள்ள தமிழ்த் தலைவர்களும் சர்வதேச நாடுகளில் உள்ள தமிழ்த் தலைவர்களும் என்னிடம் கூறினர்.

இப்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்குவது குறித்து பேசுகின்றார். சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் அமைப்பொன்று உருவாக்கப்பட்டால் எமது நாட்டிற்கு நன்மையாக அமையும்.

பண்டாரநாயக அம்மையார் அரசியல் அமைப்பொன்றை உருவாக்கினார். அப்போது சிறுபான்மைக் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. ஜேஆர் ஜெயவர்தனவின் அரசியல் அமைப்பிற்கும் ஒத்துழைப்பு வழங்கவில்லை. ஆனால் நல்லாட்சி அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்க எடுத்த முயற்சியில் சிறுபான்மை பிரதிநிதிகள் சகலரும் கலந்துகொண்டனர்.

எனவே சகல இன மக்களும் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே இந்த நாட்டிற்கு பொருத்தமான அரசியல் அமைப்பொன்றை உருவாக்க முடியும். அதிகாரப் பகிர்வு என்பதை மிகப்பெரிய அச்சுறுத்தலான விடயமாக நினைத்துக்கொண்டுள்ளனர்.

எமது வரலாற்றில் அதிகாரப் பகிர்வு என்பது இருந்துள்ளது. அதிகாரப் பகிர்வே அவசியம். அதுவே ஐக்கியத்தை உருவாக்கும். இலங்கையில் முதலில் அதிகாரப் பகிர்வை கேட்டதே சிங்கள தலைவர்கள் தான். அப்போதே அதிகாரப் பகிர்வு ஏற்பட்டிருந்தால் இன்று எமக்கு இவ்வாறான மோசமான நிலைமை உருவாகியிருக்காது.

எனவே புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குவது என்றால் சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளை வழங்குங்கள்” என்று கிரியெல்ல மேலும் தெரிவித்தார்.