November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“படுகொலையான ஊடகவியலாளர்கள் தொடர்பில் இன்னும் நீதி கிடைக்கவில்லை”: செல்வம் அடைக்கலநாதன்

“இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட, காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களை இந்த சபையில் நினைவு கூர்ந்து எனது அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். அத்துடன் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. யான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் வெளிவிவகார அமைச்சு மற்றும் ஊடக அமைச்சு ஆகியவற்றின் நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“எமது ஊடகவியலாளர்கள் நாட்டின் நற்பெயருக்கு தீங்கு ஏற்படாத வகையிலேயே செயற்படுகின்றனர். எனினும் தற்போது கூட ஊடகவியலாளர்கள் அச்சத்துடன் செயற்பட வேண்டிய சூழலே உள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை 44 ஊடகவியலாளர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டு, காணாமலாக்கப்பட்டு, கடத்தப்பட்டுள்ளனர்.

2004 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் நடேசன் உட்பட 3 ஊடகவியலாளர்களும் 2005 ஆம் ஆண்டு சிவராம் உட்பட 7 ஊடகவியலாளர்களும் 2006 ஆம் ஆண்டு சுகிர்தராஜன் உட்பட 8 ஊடகவியலாளர்களும் 2007 ஆம் ஆண்டு சந்திரபோஸ் உட்பட 11 ஊடகவியலாளர்களும் 2008 ஆம் ஆண்டு தேவா உட்பட 3 ஊடகவியலாளர்களும் 2009 ஆம் ஆண்டு லசந்த உட்பட 11 ஊடகவியலாளர்களும் 2010 ஆம் ஆண்டு எக்னலிகொடவும் கொல்லப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் போயுமுள்ளனர்.

மாறி மாறி ஆட்சிக்கு வந்த எந்த அரசும் இவர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்கவில்லை.

முல்லைத்தீவில் இரு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்த ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்லவுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அமைச்சர்கள் இப்படி பொறுப்புடன் நடந்து கொண்டால் ஊடகவியலாளர்கள் துணிச்சலுடன் செயற்படுவார்கள்.

இதேவேளை வடக்கு-கிழக்கிலுள்ள ஊடகவியலாளர்கள் மிகவும் கஷ்டத்துடனேயே பணிபுரிகின்றனர்.

எனவே இவர்களுக்கான உதவிகளை, கடன்திட்டங்களை, ஓய்வூதியத்தை அரசு அறிவிக்க வேண்டும்” என்று செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.