July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அரசாங்கம் சர்வதேச சட்டங்களை மீறியதற்காகவா நினைவேந்தலுக்கு அஞ்சுகின்றது?’

யுத்தத்தால் உயிரிழந்த உறவுகளின் நினைவேந்தலுக்கு அரசாங்கம் அஞ்சுவது சர்வதேச சட்டங்களுக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெற்ற காரணத்தினாலா? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீங்கள் ஏன் உயிரிழந்தவர்களை நினைத்து அஞ்சுகின்றீர்கள்.அவர்களை கொடூரமாக கொலைசெய்த காரணத்தினாலா, அல்லது சர்வதேச சட்டத்தை மீறிய செயற்பாடுகள் இடம்பெற்ற காரணத்தினாலா என சாடியுள்ளார்.

உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் இந்த மாதத்தில் கடந்த 30 வருட யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் நினைவுகூரப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நினைவேந்தலில் மக்கள் தமது உறவினர்கள், பெற்றோர், பிள்ளைகளை நினைவுகூர்ந்து அனுஷ்டிப்பதாகவும், அதனை தடுப்பது துரதிஷ்டவசமான செயற்பாடாகும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் ஹெலிகொப்டரில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளுக்குச் சென்று, நினைவேந்தலைக் கண்காணிப்பதாகவும், அவர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தையும் கவனத்தில் கொள்ளாது செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் அனைவருக்கும் சுயாதீனத்தன்மை இருக்க வேண்டுமே தவிர பெரும்பான்மை அல்லது அரசாங்கம் மாத்திரம் அதனை கையில் எடுத்துக்கொள்வது சர்வதேச சட்டங்களை மீறும் செயற்பாடாகும் என்பதையும் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.