November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா அச்சத்தால் கண்டி நகரில் பாடசாலைகள் மூடப்பட்டன : இலங்கையின் இன்றைய நிலவரம்

File photo

கண்டி நகர எல்லைக்குட்பட்ட சகல பாடசாலைகளையும் தற்காலிகமான மூடுவதற்கு தீர்மானித்ததாக, மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், மாணவர்களின் பெற்றோர் தொடர்ச்சியாக பாடசாலை நிர்வாகங்களிடம் முன்வைத்த கோரிக்கையை அடுத்து, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய, கண்டி நகர எல்லைக்குட்பட்ட 45 பாடசாலைகளையும் நாளை தொடக்கம் டிசெம்பர் மாதம் 4ஆம் திகதி வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று 294 பேருக்கு தொற்று

கெரோனா தொற்றுக்கு உள்ளான 294 பேர் இன்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் பேலியகொடை மீன் சந்தை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்று  இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றியோரின் மொத்த எண்ணிக்கை 21,261 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் 485 பேர் குணமடைந்தனர்: நேற்று 459 பேர் அடையாளம்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 485 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் குணமடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆடைத் தொழிற்சாலை கொத்தணியைச் சேர்ந்தவர்களாவர்.

நேற்று பேலியகொடை கொத்தணியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 458 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

கொழும்பு மாவட்டத்தில் 259 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 78 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 23 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 11 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.

பொலிஸ் கொத்தணியில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு

மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிஐடியின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உறுதியாகியுள்ளது.

இதுவரை சிறைச்சாலைகளிலிருந்து அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 753 ஆக அதிகரித்துள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஷானி அபேசேகர தடுத்து வைக்கப்பட்டிருந்த மஹர சிறைச்சாலையின் குறித்த வார்டில் இருந்து இதுவரை எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தொற்றுக்குள்ளான மேலும் 19 பொலிஸார் மற்றும் 17 அதிரடிப் படை வீரர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸ் கொத்தணியில் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,095 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பிரதேசங்கள் முடக்கப்பட்டன

களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம பொலிஸ் பிரிவின் கிழக்கு அட்டுலுகம , எபிடமுல்ல மற்றும் கொலமெதிரிய ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, கண்டி மாவட்டத்தின் புளுகஹாதென்ன மற்றும் தெலம்புகஹாவத்த ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையத்துக்கு பூட்டு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தொற்றாளருடன் தொடர்புகளைப் கொண்டிருந்த சகலரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தப்பிச் சென்ற கொரோனா வைரஸ் தொற்றாளர் கைது

வெலிகந்த கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளர் இன்று (25) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் நேற்றைய தினம் தப்பிச் சென்றிருந்த நிலையில், வெலிகந்த நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட தொற்றாளர் மதுபோதைக்கு அடிமையானவர் என்றும் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.