November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறைச்சாலையிலுள்ள முன்னாள் சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கொரோனா தொற்று

மஹர சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலைச் சம்பவமொன்றுக்கு, புனையப்பட்ட ஆதாரங்களை உருவாக்கிய குற்றச்சாட்டில் கடந்த ஜூலை மாதம் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

அபேசேகர தொடர்பான வழக்கு நாளை கம்பஹா நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருந்த நிலையிலேயே, அவர் கொவிட்- 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஷானி அபேசேகரவுக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாக அண்மையில் அவரது மனைவி, பிரதம நீதியரசர் உட்பட பல்வேறு தரப்பினருக்கும் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.

தற்பொழுது 700 க்கு மேற்பட்ட சிறைக்கைதிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு, ஷானி தடுத்து வைக்கப்பட்டிருந்த மஹர சிறைச்சாலையில் கைதியொருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.