ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் 3 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
தமது கோரிக்கைளை முன்வைத்து முதல் நாளில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்த கைதிகள், தற்போது சிறைச்சாலைக் கூரை மீதேறி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருவதாகத் தெரியவருகின்றது.
குறித்த சிறைச்சாலையின் ‘ஏ’ சிறைக் கூடத்தின் கூரை மீது 10 கைதிகளும் ‘சீ’ சிறைக் கூடத்தின் கூரை மீதேறி 5 கைதிகளும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகள், தமது கோரிக்கைகளை பதாதைகள் மூலம் காட்சிப்படுத்தியவாறு கூரை மீது ஏறியுள்ளனர்.
சிறைக்கைதிகள் சிலரை தனிமைப்படுத்தும் நோக்கில் அங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட இருக்கின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் ‘கைதிகளை அழைத்து வரவேண்டாம்’ என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, அங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையைச் சுற்றி விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.