October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்குக்கான அரசின் நிதி ஒதுக்கீடு ‘யானைப் பசிக்கு சோளப் பொரி’

“மாகாண சபையினூடாக முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகளை கச்சேரிகள் மூலம் முகவர்களினூடாக முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறான திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் அரசாங்கம் மாகாண சபைகளை பலவீனப்படுத்துகின்றது” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் நாடாளுமன்றத்தில் இன்று குற்றம் சாட்டினார் .

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, தேசிய மரபுரிமைகள், அரசாங்க சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“யுத்தத்தால் அழிந்துபோன பகுதிகளை மீளக்கட்டியெழுப்புவதற்கு தேவையான எந்தவித நிதி ஒதுக்கீடுகளையும் அரசாங்கம் செய்யவில்லை. குறிப்பாக வடக்கு மாகாணத்தில் பெருமளவான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

வடக்கில் மட்டும் 60 ஆயிரம் விதவைக் குடும்பங்கள் உள்ளன. இந்தக் குடும்பங்களின் வாழ்வாதாரங்களை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களும் கிடையாது. வடக்கில்  840 கிலோ மீட்டர் நீளமான ”சி அன்ட் டி” தர வீதிகள் திருத்தப்பட வேண்டியுள்ளன. 8567 கிலோ மீட்டர் நீளமான கிராமிய வீதிகள் புனரமைக்கப்பட வேண்டியுள்ளன.

அத்துடன் பல தொழிற்சாலைகளை புனரமைக்க வேண்டியுள்ளது. ஆனால் எதற்கும் நிதி ஒதுக்கப்படவில்லை. ‘யானைப்ப சிக்கு சோளப் பொரி’ போல் சிறிதளவு நிதியை ஒதுக்குவதனால் எதனையும் கட்டியெழுப்ப முடியாது.

மாகாண சபைகளை உருவாக்கிவிட்டு அதற்கான அமைச்சுகளை அமைத்துவிட்டு மாகாண சபை ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகளை கச்சேரிகள் மூலம் முகவர்களை வைத்துக்கொண்டு செய்யும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கின்றது.

பாட சாலைகள், சுகாதாரத் துறைகள் மாகாண சபைகளுக்குரியவை. ஆனால் அரசு இந்த துறைகளுக்கு கூட கச்சேரிகள் மூலமாகவே நிதி ஒதுக்குகின்றது. இதனால் தேவையற்ற குழப்ப நிலைகள் ஏற்படுகின்றன.

இவ்வாறான வேலைத்திட்டம் மூலம் அரசாங்கம் மாகாண சபைகளை திட்டமிட்ட முறையில் வினைத்திறன் அற்றவையாக்குகின்றது. எனவே இந்த வேலைத்திட்டத்தை அரசாங்கம் உடனடியாக கைவிட்டு மாகாண சபைகள் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டும்.

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையை மத்திய அரசு தன்வசப்படுத்த பார்க்கின்றது. இது மாகாண சபைக்குரியது. எனவே இந்த வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட்டு அதனை உடனடியாக அபிவிருத்தி செய்ய அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று கூறினார் செல்வராசா கஜேந்திரன்.