November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தீபாவளிக்கு மலையகம் சென்ற 25 பேருக்கு கொரோனா: இலங்கையின் இன்றைய நிலவரம்

File Photo

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 287 பேர் இன்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி இலங்கையில் இது வரையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 20,795 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரொனா தொற்றுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 465 பேர் பூரண குணமடைந்து இன்றைய தினத்தில் வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,962 ஆக உயர்வடைந்துள்ளதாக கொவிட் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸாருக்கு கொரோனா

நாட்டில் இதுவரையில் 1,039 பொலிஸாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் 238 பேர் விசேட அதிரடிப்படையை சேர்ந்தவர்கள் என்று பொலிஸ் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், சிறைச்சாலைகளில் இருந்து பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 717 ஆக உயர்வடைந்துள்ளது.

அக்குரணையில் இரண்டு கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

கண்டி, அக்குரணை சுகாதார பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் புளுகொஹுதென்ன மற்றும் தெலம்புஹவத்த ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் இரண்டும் இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

குறித்த பிரதேசங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் அக்குரணை பிரதேசத்தில் 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் தீபாவளிக்கு வந்த 25 பேருக்கு தொற்று

நுவரெலியா மாவட்டத்தில் இதுவரையான காலப்பகுதியில் 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 25 பேர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இருந்து வந்தவர்கள் என்று  நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்தியர் இமேஷ் பிரதாபசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கொழும்பில் இருந்து மலையக தோட்டப்பகுதிகளுக்கு வருபவர்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதூகவும் அவர் தெரிவித்தார்.

இதன்படி கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியில் கலுகல்ல பகுதியிலுள்ள சோதனைச்சாவடியிலும், கண்டி- நுவரெலியா வீதியில் எல்பொட பகுதியிலுள்ள  சோதனை சாவடியிலும் கொழும்பிலிருந்து வருபவர்களிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளன.

பண்டாரகமவில் ட்ரோன் கண்காணிப்பு

களுத்துறை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பண்டாரகம மற்றும் அட்டுளுகம பிரதேசங்களில் மக்களின் நடமாட்டங்கள் ட்ரோன் கமெராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றது.

குறித்த பிரதேசத்தின் 7 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் மக்கள், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதைக் கண்காணிக்கும் பணியில்  இராணுவத்தின் ட்ரோன் பிரிவு ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் ஊடாக மருந்துகளை வீடுகளுக்கே பெற்றுக்கொள்ள வசதி

கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் பொலிஸ் காவலரண்களில் கிளினிக் புத்தகங்களை காண்பித்து தமக்கு தேவையான மருந்துகளை பொலிஸார் ஊடாக வீடுகளுக்கே பெற்றுக்கொள்ளக் கூடிய வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட வடகொழும்பு மற்றும் மத்திய கொழும்பு பிரதேசங்களை சேர்ந்தவர்களுக்கு இவ்வாறாக மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று  சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட  நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இருப்பார்களாயின், அவர்கள் அருகிலுள்ள எந்தவொரு கிளினிக் நிலையத்துக்கும் சென்று பதிவு செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இல்லையென்றால் நோயாளிகள் தமது கிளினிக் புத்தகங்களை அருகிலிருக்கும் பொலிஸ் காவலரணுக்கு வழங்கி, தமக்கு தேவையான மருந்துகளை வீட்டுக்கே பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சுகாதார சேவைப் பணிப்பாளர் கூறியுள்ளார்.

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வைத்திய குழுக்களை அனுப்பி நடமாடும் கிளினிக்கை நடத்திச் செல்லவுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இதன் மூலமும் தமக்கு தேவையான மருந்துகளைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.