
போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் 13 அதிகாரிகளையும் எதிர்வரும் டிசம்பர் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
சந்தேக நபர்களுக்கான பிணை கோரிக்கையையும் கொழும்பு கோட்டை தலைமை நீதவான் தள்ளுபடி செய்துள்ளார்.
சந்தேக நபர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள், அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் கீழ் சந்தேக நபர்களுக்குப் பிணை வழங்கப்பட முடியுமென்று வாதிட்டுள்ளனர்.
சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜராகியிருந்த பிரதி சட்ட ஆலோசகர் நாயகம் இதற்கு ஆட்சேபனை வெளியிட்டுள்ளதோடு, சந்தேக நபர்கள் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வியாபாரிகளுடனும் ஒன்றிணைந்து செயற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வியாபாரிகளுடன் ஒன்றிணைந்து கடல் வழியாக இலங்கைக்குள் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டமைக்கு போதிய ஆதாரங்கள் காரணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விடயங்களை ஆராய்ந்த கொழும்பு தலைமை நீதவான் மொஹமட் மிஹால், சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதை தள்ளுபடி செய்து, எதிர்வரும் டிசம்பர் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.