July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இலங்கையில் போர்க் குற்றம் இடம்பெறவில்லை என்றால் சர்வதேச விசாரணைக்கு தயங்குவது ஏன்?”

File Photo

இலங்கையின் இறுதி யுத்தத்தில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என்றால், அரசாங்கம் சர்வதேச விசாரணையை அனுமதிக்க தயங்குவது ஏன்? என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என்பதை உலகமே ஏற்றுக்கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர இன்று பாராளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்குப் பதிலளிக்கும் போதே, பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

சர்வதேச பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் பாராளுமன்றத்தில் உள்ள தமிழ் தலைவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றி வருவதாகவும், போர்க் குற்றங்கள் நடந்துள்ளதாக பொய்யான கருத்துக்களை அவர்கள் வெளியிட்டு வருவதாகவும்  இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர குற்றம்சாட்டியிருந்தார்.

இதன்போது, ஒழுங்குப் பிரச்சனையை எழுப்பிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ”நீங்கள் யுத்த குற்றம் செய்யவில்லையென்றால், உங்கள் நிலைப்பாட்டை உறுதியாக நியாயப்படுத்த முடியும் என்றால், அதற்கான ஆதாரங்கள் உங்களிடம் உள்ளதென்றால், நீங்கள் சர்வதேச விசாரணையொன்றினை அனுமதிக்கத் தயங்குவது ஏன்” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்துடன், ”நீங்கள் எங்களுடன் வாதாடுவதைத் தவிர்த்து, உங்களின் நியாயத்தை விசாரணைகளின் மூலமாக நிரூபித்துக்காட்டுங்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்தத்தின் போது, தான் நாட்டில் இருந்ததாகவும், அப்பாவி மக்களை கொலை செய்ய வேண்டாம் என அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவிடம் வலியுறுத்தியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.