தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவனேசத்துரை சந்திரகாந்தனுக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில், பிள்ளையான் எனப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
பிள்ளையானுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் ஒப்புதல் அளித்ததன் பின்னரே இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன்,குறித்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஏனைய ஐவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
2005 ஆம் ஆண்டு நத்தார் ஆராதனையின்போது, மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து, ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் கைதான சிவனேசத்துரை சந்திரகாந்தன் 5 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பிள்ளையான் நாடாளுமன்றம் தெரிவுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, விடுதலைக்கான கோரிக்கையை நாடாளுமன்றத்தில் முன்வைத்து வந்தார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையானுக்குப் பிணை வழங்க முடியுமாயின், குறித்த சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனையோரும் விடுதலை செய்யப்பட வேண்டுமென்று ஜோசப் பரராஜசிங்கம் மனைவி சார்பில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.