
காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகியோரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் ஆஜராகுமாறு யாழ். நீதவான் நீதிமன்றத்தால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பாணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுப்படி செய்துள்ளது.
2011 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் யாழ். நகரில் நடைபெறவிருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஏற்பாடு செய்வதில் ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் யாழ். ஆவரங்காலில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக அவர்களின் உறவினர்களால் ஆட்கொணர்வு மனுவொன்று 2012 ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாணையின் போது, இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சாட்சிகளை விசாரணை செய்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்றுக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அந்தவகையில், வழக்கு விசாரணைகளுக்காக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.
எவ்வாறாயினும், பாதுகாப்புக் காரணங்களினால் யாழ். நீதிமன்றத்தில் ஆஜராகுவது சிரமமானது என்றும் கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு யாழ். நீதிமன்றம் விடுத்த அழைப்பாணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.