July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”விடுதலைப் புலிகளை நினைவுகூரும் எம்.பி.க்களை பதவி நீக்க வேண்டும்” : சரத் வீரசேகர

Photo: Facebook/ Sarath weerasekera  

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உயிரிழந்த உறுப்பினர்களை நினைவுகூரும் பாராளுமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வரவு – செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே சரத் வீரசேகர இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இருக்கும் சில தமிழ் எம்.பி.க்கள் சிங்களவர்களுக்கு எதிராக தமிழ் மக்களை தூண்டும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக குறிப்பிட்ட சரத் வீரசேகர, அன்று தமிழ் இளைஞர்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்துவதற்கு இவ்வாறான கருத்துக்களே காரணமாக அமைந்தது என்பதை சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் கூறினார்.

இந்நிலையில், நாட்டில் மீண்டும் பயங்கரவாத நிலைமை உருவாகுமாக இருந்தால் இனவாத கருத்துக்களை வெளியிட்டு வரும் தமிழ் எம்.பி.க்களே அதற்கு பொறுப்பானவர்களாக இருப்பார்கள் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், விடுதலைப் புலிகளை நினைவுகூருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் எம்.பி. ஒருவர் உயிரிழந்த விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரை நினைவுகூர்ந்துள்ளதாகவும், இதனூடாக அந்த எம்.பி. பிரிவினையை ஏற்றுக்கொள்கின்றார் என்பதையே எடுத்துக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய விடுதலைப் புலிகளை நினைவுகூருபவர்களின் எம்.பி. பதவியை இல்லாமல் செய்ய நடவடிக்கையெடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.