எல்பிஎல் இருபது 20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் கிளிநொச்சி மாவட்ட வீரரான செபஸ்தியன்பிள்ளை விஜயராஜ் எனும் புதுமுக வீரர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் வீரர்களுக்கான ஏலம் கடந்த மாதத்தில் நடைபெற்ற போது செபஸ்தியன்பிள்ளை விஜயராஜ் வீரர்கள் பட்டியலில் உள்வாங்கப்படவில்லை என்பதுடன் அவருக்கான வாய்ப்பும் கிடைக்கவில்லை.
எனினும். அவருடைய ஆற்றல்கள் குறித்து அறிந்துகொண்ட அணி நிர்வாகம் வலைப் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்தை அவருக்கு வழங்கியது.
இந்த வாய்ப்பை சரிவர பயன்படுத்திக்கொண்ட விஜயராஜ் சிறப்பாக பந்துவீசி சக வீரர்களினதும், அணி நிர்வாகத்தினதும் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இதனையடுத்து திங்கட்கிழமை இரவு வெளியிடப்பட்ட ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் இறுதி அணியில் விஜயராஜ் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றினால் அடையாளம் காணப்பட்ட செபஸ்தியன்பிள்ளை விஜயராஜ் அப்போதைய தெரிவுக் குழுத்தலைவராக இருந்த சனத் ஜயசூரியவிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து விஜயராஜின் பந்துவீச்சு பாணியைப் பார்த்து வியந்த சனத் ஜயசூரிய தேசிய அணி வீரர்களுடன் பயிற்சிகளில் ஈடுபட சந்தர்ப்பமளித்தார்.
கழக மட்டத்தில் கடந்த 2 வருடங்களாக பயிற்சிகளில் ஈடுபட்ட போதிலும் அவருக்கு ஏனோ முதல்தர போட்டிகளில்கூட வாய்ப்புகள் ஏதும் வழங்கப்படவில்லை.
இலைமறை காயாக இருந்த விஜயராஜுக்கு தற்போது எல்பிஎல் போட்டிகளுக்கான அணியில் இடம் கிடைத்துள்ளது.
போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சாதிக்க முடியும் என்ற எதிர்பார்ப்பில் விஜயராஜ் தொடர்ந்தும் பயிற்சிகளில் ஈடுபட்டுவருகிறார்.