November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வழக்கை துரிதப்படுத்துங்கள் அல்லது தூக்கிலிடுங்கள்’; தமிழ் அரசியல் கைதி கடிதம்

வழக்கை துரிதப்படுத்துங்கள் அல்லது தூக்கிலிடுங்கள் என 12 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாசன்‌ ஜனாதிபதியிடம் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கனகசபை தேவதாசன்‌, வயது 63, ஆகிய நான்‌ பயங்கரவாதத்‌ தடைச்‌ சட்டத்தின்‌ கீழ் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக சிறை வைக்கப்பட்டிருக்கிறேன்‌.

கொழும்பு மேல்‌ நீதிமன்றில்‌ சட்ட மா அதிபரால்‌ எனக்கெதிராகத்‌ தொடுக்கப்பட்ட 110 6194/12 மற்றும்‌ 110 5638/11 ஆகிய 2 வழக்குகளிலும்‌ முறையே 20-ஆண்டு மற்றும்‌ ஆயுள் சிறை‌ தண்டனைகள் தீர்ப்பளிக்கப்பட்டன.

இத்‌ தீர்ப்பை எதிர்த்து நான்‌ மேன்முறையீடு செய்துள்ளதுடன்‌, இவ்‌ வழக்குகளை விரைவில்‌ முடிவுக்குக்‌ கொண்டுவர விரும்பி, இரண்டிலும்‌ எனக்காக நானே வாதாடுகிறேன்‌.

ஆனாலும்‌ மேற்படி 04 283/17 மற்றும்‌ 413/18 ஆகிய 2 மேன்முறையீட்டு வழக்குகளும்‌ நீதிநடைமுறையின்‌ வீண்‌ தாமதம்‌ மற்றும்‌ கொரோனா வைரஸ்‌ பரவல்‌ காரணமாக முற்றாக முடங்கிவிட்டன.

இதன்‌ மூலம்‌,

1. நிரபராதி என நிரூபிக்கும்‌ வாய்ப்பு எனக்கு முற்றாக மறுக்கப்படுகிறது

2. என்‌ அடிப்படை உரிமை அப்பட்டமாக மீறப்படுகிறது.

இதனை விளக்கித்‌ தங்களுக்கு சிறையூடாக 6 மாதங்களின்‌ முன்‌ கடிதம்‌ அனுப்பினேன்‌. துரதிஷ்டவசமாக, அதற்குப்‌ பதில்‌ இன்னமும்‌ வந்து சேரவில்லை.

எனவே இவ்விடயத்தை இன்று வேறுவழியின்றிப்‌ பகிரங்கப்படுத்துகிறேன்‌.

மேதகு ஜனாதிபதி அவர்களே,

1. எனது இந்த 2 மேன்முறையீட்டு வழக்குகளையும்‌ துரித விசாரணைக்குட்படுத்த உத்தரவிட்டு உதவுமாறும்‌ ;

2. அல்லது இந்த 2 வழக்குகளிலும்‌ நான்‌ பிணைபெற ஆவண செய்துதவுமாறும்‌ கோருகிறேன்‌.

3. மேற்சொன்ன கோரிக்கையை நிறைவு செய்யும்‌ இயலுமை தங்களுக்கில்லை எனத்‌ தாங்கள்‌ கருதும்‌ பட்சத்தில்‌, அரசியல்‌ யாப்பில்‌ தங்களுக்கு‌ தரப்பட்ட அதிகாரத்தைப்‌ பயன்படுத்தி, என்‌ தண்டனையை மரண தண்டனையாக தரமுயர்த்தி, “யுத்தக்‌ குற்றவாளி” என என்னைப்‌ பிரகடனப்படுத்தி உடனடியாகவே பகிரங்கமாக என்னைத்‌ தூக்கிலிட உத்தரவிடுங்கள்‌.

என்‌ இம்‌முடிவு தொடர்பில்‌ யாரும்‌ என்னை ஆற்றுப்படுத்த முனைய வேண்டாம்‌. எனக்கு நீதி வேண்டும்‌ அல்லது ­மரணம்‌ வேண்டும்‌, அவ்வளவுதான்‌” என அதில் கூறப்பட்டுள்ளது.