November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் அமைப்பு பேரவை சுயாதீனமாக செயற்படவில்லை’

நல்லாட்சி அரசாங்கத்தில் இயங்கிய அரசியல் அமைப்பு பேரவை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுயாதீனமாக செயற்படவில்லை.ரணில் விக்கிரமசிங்கவும் சம்பந்தனும் சுயாதீனமற்ற நடவடிக்கைகளை அரசியல் அமைப்பு பேரவையில் முன்னெடுத்தனர் என ஆளும்கட்சி உறுப்பினர் மஹிந்த சமரசிங்க சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு திட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரத்துக்கு கீழ் செயற்படும் நிறுவனங்ளுக்காக நிதி ஒதுக்கீட்டு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

அரசாங்கம் கொண்டுவந்த 20ஆம் திருத்தத்தின் பின்னர் அரசியல் அமைப்பு சபை சுயாதீனத்தை இழந்துள்ளது என எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். நல்லாட்சி அரசாங்கத்தில் இயங்கிய அரசியல் அமைப்பு பேரவையில் நானும் உறுப்பினராக இருந்தேன். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் அமைப்பு பேரவை சுயாதீனமாக செயற்படவில்லை. அதன் நியமனங்கள் கூட பக்கசார்பாக அமைந்தது.

அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், எதிர்க்கட்சி தலைவராக இருந்த சம்பந்தனும் இணைந்தே தமக்கு தேவையான தீர்மானங்களை முன்னெடுத்தனர். ஜனாதிபதியின் கோரிக்கைகள் பெரும்பாலும் நிராகரிக்கப்பட்டது.

அதேபோல் அரசியல் அமைப்பு சபையில் பல தெரிவுகளின் போது வாக்கெடுப்புக்கு செல்லவேண்டியிருந்தது. உதாரணமாக பொலிஸ்மா அதிபரின் நியமனம் விடயத்தில் முழுக்க முழுக்க அரசியல் தலையீடுகள் இருந்தது. தகுதியானவர்களை நியமிக்கவில்லை. அதேபோல் ராஜபக்ஷவினரின் விசுவாசிகள் என பலர் நிராகரிக்கப்பட்டனர்.

அதேபோல் நல்லாட்சி அரசாங்கம் கொண்டுவந்த 19 ஆம் திருத்தம் உண்மையில் ‘பெயில்’ என்பதே உண்மையாகும். அதனை யார் உருவாக்கியது, எங்கிருந்து வந்தது என்பதும் எமக்கு தெரியும். அதுமட்டுமல்ல இந்த நாட்டில் நீண்டகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து ஐந்து ஆண்டுகளில் நாட்டினை சரியாக வழிநடத்திய போதும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் தேசிய பாதுகாப்பு முழுமையாக நாசமாக்கப்பட்டது. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே மக்கள் ஆட்சி மாற்றத்தை செய்தனர். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மீது மக்கள் கொண்ட நம்பிக்கையின் காரணமாகவே அவரை தலைவராக்கிக்கொண்டனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.