மாவீரர் நினைவேந்தல் தடை கோரி பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டமனுவை மீளப்பெற்றனர் பொலிஸார்!
மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்துவதை அனுமதிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயம் என்பதால் அதனைப் பாதுகாப்பு அமைச்சு கையாளும் என்ற வகையில் பொலிஸாரால் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை மீளப்பெறுமாறு கங்கேசன்துறைக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகரால் தனது பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையிலே பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களை பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளால் இன்று மீளப்பெறப்பட்டுள்ளன.
காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர், பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று இருந்த வேளை வழக்குகளை மீளப்பெறுமாறு மேலிடத்திலிருந்து இந்த அறிவுறுத்தல் அவருக்குக் கிடைத்துள்ளது. அதனால் அறிவுறுத்தலை வழங்கிவிட்டு அவர் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றிலிருந்து சென்றுள்ளார்.
இதேவேளை, மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் தடை உத்தரவு கோரி அச்சுவேலிப் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஏற்று தடை உத்தரவு வழங்க மறுத்த மல்லாகம் நீதிவான் நீதிமன்றம், பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட குற்றவியல் நடைமுறைகளின் கீழ் குற்றமிழைக்கப்பட்டால் கைது செய்ய உத்தரவிட்டுள்ளது.