கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 204 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 20,375 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை இன்றைய தினத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 428 பேர் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,497 ஆக அதிகரித்துள்ளது.
கைதியெருவர் மரணம்
ராகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த மஹர சிறைக் கைதியொருவர் உயிரிழந்துள்ளார்.
இவரின் பிரேத பரிசோதனையில் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
82 வயதுடைய கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளாரென சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஸ்கெலியாவில் 7 பேருக்கு தொற்று
நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா பிரதேசத்தில் இன்றைய தினத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 4 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் பிள்ளைகள் என்று பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
தீபாவளிக்காக கொழும்பில் இருந்து வந்திருந்த ஒருவர் மூலமாக தொற்று பரவியுள்ளதாக கூறப்படுகின்றது.
மருந்து விநியோக பிரிவில் 6 பேருக்கு கொரோனா
கொழும்பு டீன்ஸ் வீதியில் உள்ள சுகாதார அமைச்சின் மருந்து விநியோக பிரிவில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அங்கு பணியாற்றும் உழியர்களிடையே நடத்தப்பட்ட பரிசோதனையின் போது 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதேவேளை தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணியிருந்தவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மோட்டார் வாகன திணைக்களம் நாளை திறப்பு
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தை பொதுமக்கள் சேவைக்காக நாளை முதல் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 தொற்று பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்த, நாரஹேன்பிட்டி பிரதேசம் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனை மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
சேவை பெறுனர்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்க வரையறுக்கப்பட்ட ஊழியர்களுடன் நாரஹேன்பிட்டியில் உள்ள திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளதாக, அவர் கூறியுள்ளார்.
ஆயினும் முன்கூட்டிய நாள் மற்றும் நேரப் பதிவின் அடிப்படையில் மாத்திரம் சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வார நாட்களில் முற்பகல் 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணிவரை கீழே குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்களை அழைப்பதன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும்.
6 இலட்சம் முகக் கவசங்களை அகற்ற நடவடிக்கை
தினந்தோறும் சுமார் 6 இலட்சம் பயன்படுத்தப்பட்ட முகக் கவசங்கள் சுற்றாடலில் விடுவிக்கப்படுவதாக, சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதில் 5 இலட்சம் சத்திரசிகிச்சை முகக் கவசங்களும், கே.என் வர்க்க முகக் கவசங்கள் ஒரு இலட்சமும் அடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முகக் கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை சுகாதார முறைப்படி அகற்றுவது குறித்து, உரிய ஆலோசனைகள் மக்களுக்கு வழங்கப்படாமை காரணமாக, எதிர்காலத்தில் இது பாரிய சுற்றாடல் அச்சுறுத்தலை ஏற்படுத்துமென, சுற்றாடல் நிபுணர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகளுடன் இன்று சுற்றாடல் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
தப்பிச் செல்ல முயற்சித்த கொரோனா தொற்றாளர்
ஐ.டி.எச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவர் பிடிப்பட்டுள்ளதுடன், அவரை வைத்தியசாலையின் பாதுகாப்பு பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர்.
நேற்று மாலை குறித்த நபர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.
தெமடகொட பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய குறித்த நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இவரை, பாதுகாப்பாக சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.