
கருணா, பிள்ளையான், கே.பி ஆகியோரை மன்னித்து அரசாங்கத்தில் அரவணைத்துக் கொள்ள முடியுமென்றால், சிறு குற்றங்களில் ஈடுபட்ட 79 அரசியல் கைதிகளையும் ஏன் விடுவிக்க முடியாது? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பினார்.
2021 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரத்துக்கு கீழ் செயற்படும் நிறுவனங்களுக்காக நிதி ஒதுக்கீட்டு மீதான குழுநிலை விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சார்ள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.
யுத்த காலத்தில் கைது செய்யப்பட்ட எமது அரசியல் கைதிகளை நீண்ட காலமாக தடுத்து வைத்துள்ளதாக சுட்டிக்காட்டிய சார்ள்ஸ் நிர்மலநாதன், அவர்களை விடுதலை செய்ய துரித நடவடிக்கையெடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
இன்று சிறைச்சாலைகளுக்குள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ள நிலையில் குறுகிய கால புனர்வாழ்வு வழங்கியேனும் அவர்களை விடுவிக்க நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
கருணா, பிள்ளையான் மற்றும் கே.பியை விடவுமா சிறையில் உள்ள 79 அரசியல் கைதிகளும் குற்றம் செய்துள்ளனர் என்று கேள்வியெழுப்பிய சார்ள்ஸ் நிர்மலநாதன், குற்றவாளிகள் என முன்னணியில் உள்ள நபர்கள் அரசாங்கத்துடன் நெருக்கமானவர்களாக இருக்கின்ற நிலையில் அரசியல் கைதிகளை நீண்ட காலமாக தடுத்து வைத்துள்ளமை ஏனெனவும் வினவினார்.