File photo: Facebook/ Ranil Wickremesinghe
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற தேசிய பட்டியல் வெற்றிடத்தை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதிநிதித்துவப்படுத்த வேண்டுமென்று கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை அனர்த்த நிலைமைக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், அனுபவமுள்ள தலைவர் ஒருவர் பாராளுமன்றத்தில் இருப்பது முக்கியம் என்ற வகையிலேயே இவ்வாறானதொரு கோரிக்கை விடுக்கப்பட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற தேசிய பட்டியல் விவகாரம் குறித்து இன்று கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் எழுத்துமூலம் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் இதுதொடர்பாக வேண்டுகோளை விடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த வாரமளவில் இவ்விடயத்தில் தீர்மானமொன்று மேற்கொள்ளப்படும் என்றும் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஒவ்வொருவரது சுய விருப்பங்களுக்கு அப்பால், நாட்டு நலனைக் கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதைப் போன்றே இலங்கையின் பொருளாதாரமும் மோசமடைந்துள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இருப்பது நாட்டுக்கு பயனுள்ளதாக அமையுமென்று ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரே ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் கிடைக்கப்பெற்றது.
எனினும், அதற்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இன்று வரை இழுபறி நிலையொன்று ஏற்பட்டுள்ளது.
அத்தோடு, 2021 ஜனவரி வரை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.