
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 4 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆண்களும், 2 பெண்களுமே மரணமடைந்துள்ளார்.
இதன்படி இலங்கையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 74 பேர் கொரோனாவின் மூன்றாவது அலையில் சிக்கி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பலியாகியுள்ளனர்.
கொழும்பு 15 ஐச் சேர்ந்த 70 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 12 ஐச் சேர்ந்த 53 வயதுடைய ஆண் ஒருவரும், பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் கொழும்பு 10 ஐச் சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும் நேற்று கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
மேலும் 395 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொரோனாவின் மூன்றாவது அலை மூலம் இதுவரை 16 ஆயிரத்து 651 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
இதையடுத்து மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 166 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 14 ஆயிரத்து 69 பேர் குணமடைந்துள்ளனர். 6 ஆயிரத்து 10 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.