November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

2021 மார்ச் மாதத்திற்கு பின்னரே இலங்கையில் விமான நிலையத்தை திறக்கும் சாத்தியம்

Photo: Facebook/ Bandaranaike International Airport

2021 மார்ச் மாதத்திற்கு பின்னரே விமான நிலையத்தை திறக்க முடியுமாக இருக்குமென்று அரசாங்கம் தெரிவிக்கின்றது.

தற்போது அத்தியாவசிய விமான சேவைகள் நடைபெறுகின்ற போதும், அதனை தவிர்ந்து வேறெந்த விமான சேவைகளும் முன்னெடுக்கப்படுவதில்லை.

இந்த ஆண்டு இறுதியில் விமான நிலையங்களை திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்ட போதும், தற்போதைய நிலைமைகளை கருத்திற்கொண்டு விமான நிலையத்தை திறக்கும் நடவடிக்கையை பிற்போடுவதற்கு ஆராய்ந்து வருவதாகவே தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் காமினி லொகுகேவிடம் கேட்டபோது, நாட்டின் விமான நிலையத்தை திறக்க இன்னமும் எந்த தீர்மானம் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

மேல் மாகாணத்திலும் ஏனைய பிரதேசங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காணப்படும் நிலையில் இந்த ஆண்டு இறுதிவரை விமான நிலையங்களை திறக்க முடியாது என்பதை உறுதியாக தெரிவிக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் பொதுப் போக்குவரத்தை சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுடன் முன்னெடுத்து செல்கின்ற போதும், விமான சேவைகளை முடியாத நிலைமையே இருப்பதாகவும், எப்படியும் மார்ச் மாதத்திற்கு பின்னரே அதனை திறக்க முடியுமாக இருக்குமென்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்தியாவசிய விமான சேவைகள் தவிர்ந்த ஏனைய சகல விமான பயணங்களும் நிறுத்தப்பட்டுள்ள காரணத்தினால் இப்போதைக்கு விமான சேவைகள் வழமைக்கு திரும்பாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.